Uncategorized

ஊருக்குத்தான் உபதேசம்… தடுப்பூசி போட்டுகொள்ளாத சோனியா, ராகுல் காந்தி… பாஜக அம்பலப்படுத்திய ‘குட்டு’!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

2views

நமது நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இன்றைய நாள் வரை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக ட்விட் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மோடி அரசையும், கொரோனாவையும் சம்பந்தப்படுத்தி, தினமும் ஏதாவது செய்தி வெளியிடாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது, போலிருக்கிறது.

டுவிட்டர் சண்டை :

காங்கிரசின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி உடல் நலக்குறைவாக உள்ள நிலையில் தற்போது கிட்டத்தட்ட ராகுல்காந்திதான் கட்சியை வழிநடத்தி வருகிறார். அதனால் அவர் தற்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ட்விட்களை பதிவிட்டு மத்திய அரசை கடுமையாக சாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

Rahul_Gandhi_UpdateNews360

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 4 மாநிலங்களில் படுதோல்வியை தழுவியது. அந்தக் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் என்னவோ மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் ராகுல் மிகக் கடுமையாக சாடி வருகிறார்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதம் மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தபோது, அதை வன்மையாக கண்டித்தார். கேலியும் செய்தார். இந்த ஆண்டு அப்படியே பல்டியடித்து, “கடுமையான ஊரடங்கை அமல் படுத்தவேண்டும்” என்கிறார்.

தனிமனித தாக்குதல் :

மேலும் சென்ற வருடம் முழுவதும், கொரோனா பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது என்று குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி இந்த ஆண்டு, தடுப்பூசி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்ட தடுப்பூசி தொடர்பான ட்விட்களைப் பார்த்தால், அதில் தனிமனித தாக்குதல்தான் அதிகம் இருப்பதை காணமுடியும்.

தடுப்பூசி, ஆக்சிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், மத்திய தலைமை செயலக கட்டிட திட்டத்துக்காகச் செலவிடும் 13,450 கோடி ரூபாயின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” என்றும் சாடினார்.

modi_updatenews360

மிக அண்மையில் ராகுல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டும் போதாது.
தடுப்பூசி மையத்துக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது” என்று மத்திய அரசை குற்றம்சாட்டி இருக்கிறார்.

கடந்த மாதம், மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கை மூன்றாவது அலையை ஏற்படுத்தும் என்று ஒரு குற்றச்சாட்டை ராகுல் வைத்தார். நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு, மத்திய அரசுதான் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பது

இந்த நிலையில்தான் 2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிற 21-ந் தேதி முதல் வழங்கும் என அதிரடி காட்டினார்.

உண்மையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை ராகுல்காந்தி வரவேற்று இருக்க வேண்டும். மாறாக, தடுப்பூசி போடுவது மாநிலங்களின் சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தடுப்பூசிகளை எங்கள் வசமே கொடுக்கவேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்று கோரிக்கை வைக்கும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து ராகுலும் குரல் எழுப்புகிறார். அதாவது ஒரே மாதத்தில் இவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அப்படியே மாற்றி கொண்டு விட்டனர் என்பது தெளிவாகிறது.

Mamata_Banerjee_UpdateNews360

இதன்மூலம் இரண்டு விஷயங்கள் புலப்படுகிறது. மத்திய பாஜக அரசு ஒரு கருத்தைச் சொன்னால், அதை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பது, மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு விட்டால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல், ஏதாவது சிக்கலை உண்டு பண்ணுவது என்பதை எதிர்க்கட்சிகள் ஒரு யுக்தியாகவே பயன்படுத்துகின்றன.

குறிப்பாக சோனியா, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் நால்வரும் தாங்கள் முன்பு என்ன சொன்னோம், இப்போது என்ன சொல்கிறோம் என்பதையே மறந்துவிட்டு பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கூரான தாக்குதலை நடத்துகின்றனர்.

தடுப்பூசி போடாத சோனியா, ராகுல் :

இந்த நிலையில்தான் எப்போது பார்த்தாலும் தடுப்பூசி தடுப்பூசி என்று பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்பதை பாஜக அம்பலப்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சோனியாவும், ராகுலும் தொடர்ந்து தடுப்பூசி பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மக்களின் உயிருடன் விளையாடும் கூடாது என்றும் பீதியை கிளப்புகின்றனர்.

இத்தனைக்கும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பற்றி ஏராளமான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர்.

Rahul_Sonia_UpdateNews360

ஆனால் எனக்கு தெரிந்தவரை சோனியாவும், ராகுலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏன் இந்திய தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்” என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேசிய கட்சியின் இரு பெரும் தலைவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது கவலை தரக்கூடிய விஷயம்தான்!

Leave a Response